Sunday, January 25, 2009

வயளூர் கிழவன்

செவ்வாய் கிழமை:


நான் வழக்கம் போல் காலேஜ் செல்ல bus பிடித்து சீட்டில் அமர்ந்தேன்.

எனக்கு அடுத்து அமர்ந்தவர், "தம்பி, நான் ஊருக்கு புதுசு, வயலூர் வந்தா சொல்லுங்க " என்றார்

"சார், கவலையே படாதீங்க, இந்த பஸ் கடைசி ஸ்டாப் அதுதான் - என்னோட காலேஜ் ரொம்ப முன்னாடி வந்துடும் , நீங்க கோவிலுக்கு போறீங்களா? " என்று சொன்னேன்.

"இல்ல, இப்பதான் கோவிலில் இருந்து வர்றேன், கிழவன் சுப்பனை பாக்க போறேன் "

எனக்கு வியப்பாக இருந்தது, சற்று கோபமாகவும் இருந்தது, முருகு என்றாலே அழகு, முருகன் இளைஞன், அவனை கிழவன் என்று சொல்ல என்ன தைரியம் - ஆனால் - அவரை பார்ப்பதற்கு நல்ல படித்த தோற்றம், கையில் அங்கில புத்தகம். ஆர்வம் உந்த மீண்டும் அவரை கேட்டேன்

"என்ன சார், ஒன்னும் புரியலியே "

"அதுவா, நான் கோவில்னு சொன்னது ஸ்ரீ ரங்கத்தை தான் - அதுதான் பெரிய கோவில் - பாக்க போறது வயலூர் வள்ளலை" என்றார்


"அப்புறம் என் கிழவன்னு சொன்னீங்க?, முருகனை இதுக்கு முன்ன பாத்து இருக்கீங்களா? -அழகுன்னா அது என்னன்னு தெரியுமா ? தமிழ் மணக்கும் தரணியின் தலைவன் அவன் "


"சரி தம்பி, கோவிக்காதீங்க, நான் ஒன்னும் தப்பா சொல்லலியே, அது இருக்கட்டும், வயலூர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு சொல்லுங்க, காதார கேட்போம்"


எனக்கு இன்னும் அவர் மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும், வயளூரை  விவரிக்கலாம் என்று நினைத்தேன். எப்படியும் இன்றும் கூட்ஸ் வரும், எங்கள் பஸ் அப்போதுதான் ராமகிருஷ்ணா தியேட்டர் திருப்பம் வந்தது. "சார், வயலூர், முருகனின் பெரிய க்ஷேத்த்ரம். இங்கதான் அருணகிரி திருப்புகழ் ஆரமிச்சார் தெரியுமா? அதனால்தான் விநாயகர் துதி - "கைத்தல நிறைகனி" - இங்க இருக்கற பொய்யா கணபதி கிட்ட தான் பாடினார். இது 15 ம் நூற்றாண்டு.

இன்னும் முன்ன பாத்தீங்கன்னா, என் அய்யன் நிருத்த நாயகன் நடராஜன் இரண்டு கால்களும் நிறுத்திய தலம். மயில் தேவனையிடம் பேசும் மயில் பேசும் தலம். ஷக்திவேல் இருத்தி நீராழி கண்ட தலம். செழிப்பான நெற்கதிர்கள் நடுவே வயலை ஊராக கொண்டு இருக்கிறான் - போதுமா, இல்ல வன்னி மர வரலாறில் இருந்து ஆரமிக்கவா? என்னையும் மிச்ச பசங்க மாதிரி நினைக்காதீங்க, திருச்சி சுத்தி இருக்கற அனைத்து கோயில் சிறப்பும் தெரிஞ்சவன் " என்று சொல்லி இளைப்பாறினேன்

கூட்ஸ் வண்டி சென்று விட்டது, இனி ரயில் கேட் ஏத்தி இரு வழிகளிலும் பஸ் செல்ல வேண்டும் - அதற்குள் சைக்கிள், பைக், ஆட்டோ ஒன்றுகொன்று படை வீரர்கள் மோதுவது போல் இரண்டு புறமும் தாக்குதல் நடத்தி கொண்டு இருந்தார்கள்


"எல்லாம் சரி தம்பி, ஆனா இன்னும் ஒன்னு சேத்து சொல்லவா, இந்த ஒரு இடத்தில் தான் குமரன் "இறங்கி" இருக்கிறான் - பக்கத்துல இவ்ளோ பெரிய மலை இருந்தும் வயல்ல போய் பதுங்கிட்டான் பாத்தியளா

அதுல பாருங்க, எங்க குருநாதன் சொல்லியபடி, வயலூர் தான் முருகனுக்கு முதல் வீடு - இந்த ஆறுபடை வீட்டுக்கெல்லாம் பல தலைமுறைகள் பழசு.

வயலூரிலே குருபரன் குடி கொண்டப்போ ஈசன் தில்லை நடம் புரியல - தில்லை அப்போ வனமாகத்தான் இருந்தது. காளி பொறக்கல -- அதனால்தான் இங்க ரெண்டு காலும் ஊனி நிக்கான்

அந்த மயிலு, சூரன் இல்ல, தேவேந்திரன் - அதான் தன் மகள் பக்கம், தேவானை பக்கம் திரும்பி இருக்கான். அதாவது சூர ஸம்ஹரம் நடக்க இல்ல

நாரதர்  மாம்பழம் கொண்டு வந்து ஈசன் கையில் குடுக்கல - அதனால  பழனி மலை உருவாகலை - வெறும்  கரடாத்தான் இருந்தது -


அப்போ இந்த மலை, மலைகோட்டை பொறக்க கூட இல்ல இதையெல்லாம் கருத்தில் வைத்துதான் வயலூரில் இருந்து பாட சொல்லி அருணகிரிக்கு கட்டளை போட்டான் சுப்பன் - அதுல கூட, "முத்தை" ன்னு ஆரம்பிச்சு ஒரு பாட்டு படிச்சவுடன் மௌனம் காக்க சொல்லிட்டான் -


அண்ணாமலையில் இருந்து அணை போட்டு அடுத்த வரிகளை எல்லாம் வயலூர் வரை தடுத்து, நிரப்பி விட்டான், அதுல தான் "கைத்தலம்" அப்பிடின்னு ஆரம்பிக்க வலு கிடைச்சுது


சூசகமா, ஐயா உன்கையை பிடிக்கும் பாக்கியம் கொடுத்தியே!.. கை கொடுத்து தூக்கி விட்டியே அப்படின்னு அருணகிரி சொல்ரரோன்னு நெனைக்க வைக்குது இப்ப சொல்லுங்க, இவ்வளவு பழைய குடியை கிழவன்னு சொல்லாமே குமாரண்ணா சொல்ல முடியும்? அதிலும் பாருங்க, தமிழ்ல மட்டும் தான் கிழவன்னா தலைவனும் பொருள் - என்ன நான் சொல்றது - இருந்தாலும் உங்க வயசுக்கு இவ்வளவு தெரிஞ்சு இருக்கறதே பெரிசுதான்


இப்போது ஒரு மாதிரி வெட்கமாகவும், வெளிச்சமாகவும் இருந்தது - "ரொம்ப நன்றி சார்"


"கவலை வேண்டாம் தம்பி - வேலன் அருள் உனக்கு உண்டு "


ஆமா சார் அருனகிரிக்கே அருள் பண்ண ஆண்டவன் நமக்கும் பண்ணுவான்


தம்பி, அருணகிரி பத்தி இப்போ எல்லாரும் அவதூறு கிளப்புறாங்க - வான வெளியில இருக்கற நக்ஷத்ர மண்டலத்த இங்க இருந்தே கணிக்கறவனும் இருக்கான், ராக்கேட் ஏறி போய் பார்க்கரவனும் இருக்கான்.


சிட்டு குருவி அதோட குட்டி குருவிக்கு பறக்க சொல்லி தரும்போது தத்தி தத்தி காமிக்கும் - அதுக்கு பறக்க தெரியாம இல்ல - குஞ்சுக்கு புரியணும்னு தத்தி தாவி தடதடத்து தாங்கி தரையை விட்டு தவ்வி பறக்கும்


அது மாதிரி அருணகிரி இருந்த காலத்துல, சந்தத்துல முதல்ல மயக்கி, சிந்தனையிலே புகுந்து சிவமயம் காட்ட ஒரு வழியா இதை பயன்படுத்தி இருக்கார்னுதான் எனக்கு தோனுது கொடுந்தமிழ் இலக்கியம் இது ஒண்ணுதான் இப்போ கைவசம் இருக்கு

வாழ்க்கையை விட வழிமுறை நிறைந்த அருணகிரி பாக்களிடம் மனசு செலுத்துங்க - இந்த வயசுக்கு வெளிச்சம் கிடைக்கும் - முருகன் அருள் மிகும் “ 

என்றார்


"சரி கிளம்பறேன் சார், பாப்போம் , நானும் இந்த வாரம் திரும்ப ஒருமுறை வயலூர் வந்து இந்திரனை பாக்கறேன்" பெரிய ஆஸ்பத்திரி தாண்டி திரும்பியது பஸ் - அடுத்தது என் ஸ்டாப், படி நோக்கி நடக்கலாளேன்.


பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்கும் போது " தம்பி ரொம்ப நன்றி, மீண்டும் சந்திப்போம்" என்று குரல் கேட்டது - திரும்பி பார்த்தால் - அந்த சீட்டில் ஒரு பொக்கை வாய் கிழவன், என்னை பார்த்து சிரித்த வண்ணம் கையை காட்டினார் - மற்றொரு கையில் கோல் இருந்தது , . அப்போ அவர் எங்கே என்று தேடுவதற்குள் பஸ் வெகுதூரம் சென்று விட்டது

இன்னும் காத்து இருக்கிறேன், என்றாவது ஒரு நாள் சந்திப்போம் என்று