நாமெல்லாம் இதுவரை படித்த ராமாயண தொடக்கம் ராவணனின் அரக்கத்தனம், ராமர் பிறப்பு, என்றுதானே இருந்தது - இங்கே அதற்கு முன் நிகழ்ந்த சில படலங்களை தொகுக்க முயற்சித்து இருக்கிறேன் - இதில் வரும் வரலாற்றில் எந்த கற்பனையோ இல்லை - கதை நகர கடுகு தாளித்திருப்பது மட்டும் நான்
பூர்வ காண்டம் - அமராவதி படலம்
அமராபுரியில் கைகேயி, தசரதனை மகிழ்விக்க மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திரன், சம்பரசுரனை சமரில் தனியாக எதிர்கொள்ள முடியாமல் போனாலும் தசரதன் "துணையுடன்" வெற்றி கிட்டியது. தன் இளம் மூன்றாம் மனைவி கைகேயியுடன் வந்திருந்த தசரதன், அருமையான வியுகம் வகுத்து வெற்றிக்கு வழி கோலினான். கைகேயியின் ரத நடத்துதல் எல்லோரையும் வியக்க வைத்தது.
என்னதான் இந்திர சபை என்றாலும் தசரதனுக்கும் கைகேயிக்கும் நடனம் ரசிக்கவில்லை. தேவர்கள் செயற்கை என்று தெரிந்ததும் நடனம் வெறும் அனிமேஷன் போலவே இருந்தது. இந்திரனிடம் பூங்கா உலா போவதாக கிளம்பினர் - சபையே திரும்பி பார்க்கும் அளவு சிரித்த இந்திரன் அவர்களை தனியே அனுப்பினான்
தசரதனுக்கு இன்னும் போர் நினைவு அடங்கவில்லை. கைகேயி மட்டும் ஒரு நொடி தேர் சுழற்றாமல் இருந்திருந்தால் .............
தசரதன்: கைகேயி, உன் திறமை அபூர்வமானது, எப்படி நன்றி சொல்வேன், நீ மட்டும் ஒரு நொடி மாற்றியிருந்தாலும் இன்று நான் சுவர்க்கதிலேயே சுவர்க்க பதவி அடைந்திருப்பேன்
கைகேயி: மன்னருக்கு என் திறமையில் நம்பிக்கை இருந்ததால்தான் தேரோட்ட என்னை அழைத்ததாக நான் நினைத்தேன், தேரோட்டியின் கடமையை செய்தேன்
தசரதன்: இருந்தாலும் ஏதாவது கேள் கைகேயி, என் மனம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது, என்ன வேண்டும் உடனே கேள்
கைகேயி: புது மனைவி வரம் கேட்கும் அளவு மன்னர் தாங்கள் தவிக்க விடவில்லை - இப்போது ஒன்றும் தோன்றவும் இல்லை - வேண்டுமானால் வரமாக வைத்துகொள்கிறேன், கடைசி காலத்தில் உதவும்
தசரதன்: சரி, பிறகு கேட்பதாக இருந்தால் ஒன்றிற்கு இரண்டாக கணக்கில் வைத்துகொள் ஆனால் என்னை கடனாளியாக கரை ஏற்றாதே
- ஏற்கனவே புத் எப்படியிருக்கும் என்ற கவலையில் இருக்கிறேன்
கைகேயி: இதென்ன பேச்சு நல்ல நேரத்தில் சுவர்கத்தில் ..............
குபேர படலம்
இப்படி இன்னும் பேசிக்கொண்டே இருவரும் ஒரு புது தோட்டத்தினுள் நுழைந்தனர் - எதிரே சற்று குள்ளமான குண்டான இன்னொரு மனிதன் நடந்து வருவதை பார்த்ததும் வியப்புடன் நின்றனர் - உடலோடு வானுலகில் ஒருத்தனை பார்ப்பது அரிது தானே? (ஊரு விட்டு ஊரு வந்தாதான் நம்ம ஊரு, நம்ம நாடு, நம்ம கண்டம் அப்படின்னு உணர்வு வரும் அவங்களுக்கு மட்டும்தான் இது புரியும் )
தசரதன்: நான் தசரதன், பூமியில் அயோத்யா ஆள்பவன். இவள் என் துணைவி கைகேயி. இந்திரன் எங்களிடம் நாங்கள் இருவர் மட்டுமே மானிடர் என்று சொன்னான் - உங்களை பார்த்ததில் வியப்பு, மகிழ்ச்சி - நீங்கள்?
புது மனிதன்: வாருங்கள், இது என் அரண்மனைதான், நானே உங்களை காணத்தான் விருந்து மண்டபம் கிளம்பினேன். வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் குபேரன், இங்கு புதிதாக தஞ்சம் வந்தவன். சீக்கிரமே கைலாயம் அருகில் அளகாபுரி அமையவிருக்கிறது - அதுவரை இங்கே இருக்கிறேன்.
தசரதன்: ஆஹா, குபேரருக்கு எங்கள் வணக்கங்கள். நீங்கள் இங்கிருப்பது தெரிந்தால் சுமந்திரரும் வந்திருப்பார். உங்களிடம் பொருளியல் பயில ஆர்வமுடன் இருக்கிறார்.
குபேரன்: நான் ஒன்றும் அவ்வளவு பெரியவனில்லை.இந்திரனே இறைஞ்சி நிற்கும் தாங்கள் எங்கே, இந்திரனிடம் தஞ்சம் கொண்ட நான் எங்கே - இப்போது கூட உங்களிடம் ஒரு உதவி கேட்கவே வந்துகொண்டு இருக்கிறேன். தாங்கள் இருவரும் என் மாளிகையில் தங்கி உணவு அருந்த வேண்டுகிறேன், பூலோக விருந்து காத்து இருக்கிறது
தசரதன்: என்ன அருமை, உடனே செல்வோம், அறுசுவை அருந்தி பல நாட்கள் ஆகிவிட்டது - அப்படியே உங்களுக்கு நான் எப்படி உதவ முடியும் என்று சொல்லுங்கள் நிதி அரசே
குபேரன்: என்னால் உங்கள் அளவு வேகமாக நடந்தவண்ணம் பேச இயலாது, சாப்பிட்டவுடன் பேசுவோம்
தசரதன்: வானுலகு வந்தும் மனித இயல்பை நன்கு உணர்ந்தவர் தாங்கள் - உண்ட பின் மனம் நிறைந்திருக்கும், வரம் பலிக்கும் - நல்லது
குபேரன்: ஐயா சப்தவேதி என்ற புகழ் படைத்தவரே, நாங்கள் அண்ணன் தம்பி நாலு பேர். ஒரு தமக்கை. நான் பிறந்ததும், என் உடல் உரு கண்டு என் தந்தைக்கும் தாய்க்கும் தகராறு. எனக்கு பிறந்தது முதலே பெரிய சுருக்கமிலா தொந்தி, எட்டே எட்டு பல், ஒரு பல்லுக்கும் அடுத்ததற்கும் நடுவில் இருக்கும் சந்தில் இரண்டு பல் அளவு இடம். அதனால்தான் என் பெயர் கு-பேரன் என்று வைத்தனர். என் தாயின் வளர்ப்புதான் என்னை பொருளியலில் வித்தகனாக்கியது. என் தம்பியர் மிகுந்த உடல் வலு உடையவர். ஆனாலும் அவர்களைவிட என் புகழ் வெகு சீக்கிரம் வெகு தூரம் பரவியது
இதற்கு முன், காசு இறவா வரம் பெற்று உலகை அடக்கும் "பொருளாக" இருந்தது. . காசுக்கும் சாவு உண்டு என்று நான் மாற்றியமைத்தேன். இதனால் மக்கள் செலவிடும் தன்மை மாறியது, சேர்க்க முடியாததால் ஈட்டிய எல்லாம் செலவானது, மீந்து இருந்தால் வீண் போகும் முன் தானமாய் மாறியது. அனைவரும் உழைத்தால் தான் வாழ முடியும் என்பதாலும், செலவு செய்ய வழிகள் வேண்டும் என்பதாலும் எண்ணற்ற புது வழிகள் பிறந்தன - அனைத்து உலோகங்களும் இரத்தினங்களும் அரசு உடமையாக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது - மனிதம் பன்மடங்கு முன்னேறியது
இறையை அடைய 64 கலைகளில் எதிலும் அடையலாம் என்ற கூற்று மீண்டும் என் மூலம் நிரூபிக்கப்பட்டது. என் உடல்நிலையால் ஊனிருத்தி உடல் இருத்தி பல்லாண்டு தவமியற்ற முடியவில்லை. ஆனால் பொருளியல் மாற்றங்களின் மூலம் இறை நாட முடிந்தது. அரிய தவ சீலர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பிரம்மதரிசனம் எனக்கு கிடைத்தது.
பிரம்மாவே முன் நின்று திரிகூட மலை சேர்ந்த இலங்கையை உருவாக்கி எனக்கு தந்தார். அனைத்து நிதிகளும் திருமகளிடம் உற்பத்தி ஆனாலும் அதன் பயனும் பங்கீடும் என் பொறுப்பில் வந்தது
இலங்கை - தங்கமும் இரத்தினங்களும் இழைத்த நகரம் - சூரியன் சந்திரன் இருவரும் இளம் பார்வை மட்டுமே பார்க்கும் இடம். கைலாயத்திலிருந்து பார்க்கும் போது தெரியும் பூவுலகின் ஒரு சில இடங்களில் ஒன்றாக ஆனது
இதற்கெல்லாம் சிகரம் போல் உருவானது புஷ்பக விமானம். இதுவரையில் இல்லாத அற்புதம் - இனிமேலும் செய்ய முடியாத ஒரு பொருள். விஸ்வ கர்மாவே மீண்டும் செய்ய நினைத்து முடியாது போனது
புஷ்பகம் எஜமானனின் மனதறிந்து செயல்படும் எந்திரம் - உயிருள்ள வேலையாட்களைவிட பன்மடங்கு நம்பிக்கையானது - தீக்கோள் முதல் வஜ்ராயுதம் வரை தாங்கக்கூடியது
என் வினை - ராவணனை கூப்பிட்டு இலங்கையில் விருந்து வைத்தேன். அவன் என்னை இள வயதில் செய்த ஏளனத்திற்கு எதிர் செய்வதாக நினைத்து அவனிடம் என் வசந்தங்களை சொன்னேன், என் புகழ் விஷ்ணுவிற்கு நிகரானது என்றேன், திருமகளையே நான் வைத்திருப்பதாக காட்டினேன்
விளைவு - நாடிழந்தேன், அனைத்து நிதிகளும் இழந்தேன், பொருளியலால் இந்திரனிடம் தஞ்சமும் பிரம்மாவிடம் வடக்கு திக்கிற்கு அதிபதித்துவமும் கிடைத்தது. எனக்கு மீண்டும் இலங்கை வேண்டாம் ஆனால் புஷ்பகத்தை மட்டும் மறக்க முடியவில்லை "பொருள்" ஆனதால் அதை அடைய மனம் துடிக்கிறது - உங்களால் மீட்டுதரமுடியுமா
தசரதன்: குபேரா, உணதுரிமையை மீட்பதில் நானும் நிச்சயம் உதவுவேன் - ஆனால் என் நிலைமை என்னால் தண்டகாரண்யம் தாண்ட இயலாது, பரசு ராமர் இருக்கிறார். நானும் என் முன்னோர்களும் ஹேஹைய வம்சத்தவர்களும் மிக நெருங்கியர்வர்கள் - என் தலை பரசுவால் உருளாதது ஒரு காரணத்தால்.
மேலும், ராவணன் சக்தி செறிந்தவன், அவனை போருக்கு அழைக்கும் முன் துணை வலி வெல்ல வழி தேடவேண்டும் இல்லையேல் தோற்பது நிச்சயம்.
இன்றைய யுத்தத்துக்கு பிறகு என்னால் இன்னொரு யுத்தம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை சற்று தளர்ந்து விட்டது - இன்று ஜெயித்ததே அத்ருஷ்டம் என்றுதான் நான் சொல்வேன். வியுகங்கள் பொய்த்துவிட்டன. ராவணனுக்கு சம்பராசுரனைவிட படை அதிகம். யுத்தமும் மண்ணில் நடக்கும். வின் வித்தைகள் இயலாது. உயிர் சேதம் மிகும். இத்தனையும் செய்வதால் அயோத்திக்கு என்ன பலன் என்று ஆன்றோர் சபையில் நான் எதை சொல்வது? குபேரன் நட்பா?
குபேரன்: இல்லை தசரத மன்னா ! நீங்கள் இந்த போர் செய்யாவிட்டாலும் உங்களில் ஒருவனாக ஏற்க வேண்டுவேன். உங்களை போன்ற மேதைகளின் சுற்றம் பெரிய பலம். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை - இந்திரனே தங்கள் நண்பர் அவரை விடவா என்னால் ஏதாவது செய்ய முடியும்?
கைகேயி: உங்கள் பேச்சில் எனக்கு தோன்றும் ஒரு விஷயத்தை வைக்க மனம் அலை பாய்கிறது - இந்திரனாலும் முடியாத ஒன்று மன்னர் மனதை உருக்கி வருவது எல்லாருக்கும் தெரியும் - குபேரர் அதை தீர்க்க வழி சொன்னால் அயோத்தியின் ஒவ்வொரு பிரஜையும் தானாகவே போருக்கு புறப்படுவார், மன்னருக்கும் மீண்டும் போரில் சப்தவேதியை சோதிக்க ஒரு தருணம் கிடைக்கும்
குபேரன்: சொல்லுங்கள் தாயே, இந்திரனால் முடியாத ஒன்றை நான் செய்வத ன் மூலம் அவனுக்கும் செய்நன்றி தீர்க்க ஒரு தருணம் வாய்த்தது, இக்ஷ்வாகு குல திலகருக்கு நான் என்ன செய்ய முடியுமோ செய்வேன்
தசரதன்: சங்க - பதும நிதிகளின் அரசே, உனக்கும் தெரிந்து இருக்கலாம் - எனக்கு இதுவரை ஒரே ஒரு பெண் மகவு மட்டும் தான் வாய்த்தது. பாத்திரம் வளர்த்த நான் இன்னும் கோத்திரம் வளர்க்கவில்லை - அதனால்தானோ என்னவோ இந்த சுவர்கத்தில் என் முன்னோர்களை காண முடியவில்லை - என் வம்சம் வளர வழி ஏதாகிலும் உள்ளதா
குபேரன்: வளர்பிறையொத்த அரசே, இதற்கான விடை எளியது, நான் சொல்வதை விட இதை குருமுகமாக தங்களுக்கு கிடைக்கும்படி செய்கிறேன் , உடனேயே குரு வசிஷ்டரை நான் பார்த்து சொல்கிறேன். உங்கள் மாப்பிள்ளை ரிஷ்யசிருங்கர் இருக்கும்போது இந்த கவலையே தேவை இல்லை
தசரதன்: பொருள் அரசே குபேரா - இன்று பல மகிழ்ச்சியான சம்பவங்கள் ஒரு சேர கிடைக்கின்றது, ஒரு வேளை இதுதான் அந்திம காலத்தின் அறிகுறியோ ? என் சந்ததி வளர்ந்தால் நானோ அவர்களோ உன்னிடம் புஷ்பக விமானம் கொண்டு வந்து சேர்ப்போம், இது உறுதி - ராவணின் துணை வலிமையை பற்றி என்ன செய்தி இருக்கிறது?
குபேரன்: நண்ப! சில விசேஷ சக்திகளை சேர்த்து வருகிறேன் - இவை எல்லாம் ராவண யுத்தத்தில் உதவும். சில தினங்களுக்கு முன்தான் வாயு புத்திரன் மாருதிக்கு வளரும் கதையை பரிசளித்தேன். சிவனின் சொருபமாக இருக்கும் மாருதி யுத்தத்தில் பெரும் பங்கு வகிப்பான்.
இந்திரனும், அஷ்ட திக் பாலகர்களும் உதவுவதாக வாக்கு அளித்துள்ளனர்.
எப்படி என்னிடம் இருந்து ராவணன் பறித்தானோ அதேபோல் அவன் தம்பியரும் இலங்கையை ஆள ஆசைப்படலாம் - அவர்கள் மூலம் அவனை வெல்வது மேலும் எளிய வழி
மேலும், விஸ்வாமித்திரர் இங்கு இந்திரனை காண வந்தபோது அவரை உபசரித்து வேண்டினேன். காலம் வரும்போது கட்டாயம் உதவுவதாக சொல்லி இருக்கிறார். அவர்தான் உங்களிடம் படை நடத்தும்படி கேட்க சொன்னார்
தசரதன்: நல்லது குபேரா, வெகு சீக்கிரம் புஷ்பகம் உன்னிடம் வந்து சேர ஆவன செய்கிறோம் ,
ராமர் முதலில் தாடகை வதமும், விஸ்வாமித்திரர் ராமருக்கு பல விசேஷ ஆயுதங்கள் வழங்கியதும், திருமகள் ஒத்த சீதையை கைப்பிடித்ததும், பரசு ராமரை வென்றதும், கைகேயி சபதமும், ராமர் ஆரண்ய வாசமும், கபந்த மோக்ஷம், ராவணனின் குபேரனைவிட பெரியவன் என்று காட்டும் வெறியும், அதுவே திருமகள் ஒத்த சீதையை அடைய தூண்டியதும், ஆஞ்சநேய, சுக்ரீவ சிநேகமும், வாலி வதம், விபீஷன ச்நேஹம், ராவண வதம், புஷ்பக விமான அயோத்யா பிரவேசம், கடைசியில் புஷ்பக விமானம் குபேரனை அடைவதும் நாம் அறிந்ததே
ஒரு மனிதனால் (மாற்று திறனாளியால்) இறை ஆக முடியும், இறைவனுக்கே கடன் கொடுத்து வட்டி வாங்கும் அளவுக்கு உயர முடியும் என்று எனக்கு உணர்த்திய குபேரனை ராமாயண கருப்பொருளாக வைக்கும் ஆசையே இந்த கதை -
செவி வழிச்செய்தி: அவரின் காசின் சாவு தத்துவம் மற்றும்
இறை அடைய பக்தியும் யோகமும் மட்டுமே வழியல்ல - இவை இரண்டும் பிரதானமானவையே (popular)