Wednesday, March 10, 2010

பல்லைலக்கா!... ஒரு ஆராய்ச்சி

ரொம்ப நாளைக்கு இருந்த சந்தேகம் " ஹே பல்லைலக்கா பல்லேலைக்கா " என்ற பதத்தின் பொருள் என்ன
ஒரு பாட்டு மூலமே விடை கிடைத்தது

நீங்களும் பாருங்கள்


Sunday, March 7, 2010

பீஷ்மர்

காலையில் இருந்து ஆபீஸ் வேலை நெட்டி எடுத்தது - இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து - உள்ளே மனைவியும் மகனும் தூங்கி கொண்டு இருந்தனர் - சத்தம் போடாமல் வெந்தும் வேகாமல் இருந்த உப்புமா தின்னு அப்படியே சோபாவில் தூங்கலாம் என்று நினைத்தேன் - டீ வீ பார்க்க கண் சொருகியது - என்னையும் அறியாமல் சிவன் த்யானம் வேகமாக ஓடியது - என் பாட்டி சின்ன வயதில் சொல்லி கொடுத்தது - இன்று வரை விடாமல் தூங்கும் முன் வருகிறது -

பாம்புகளா தேளுகளா பரமனுடைய ஆளுகளா

சடலத்தை போட்டேன் சிவ சங்கரனை கண்டேன் சரணாகதி சரணாகதி என்று உரைத்தேன் ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி


மேலும் தொடரும் ...


சோபாவில் குறுக்கியபடி தூங்கி போனேன் - போர்வை தானாக வந்ததுபோல் இருந்தது - தூங்கி எழுந்ததும் - பரமசிவன் வந்தார் - கனவல்ல - புத்தி சுவாதீனம் நன்கு இருந்தது - என்ன என்னமோ கேட்க வேண்டும் போல் இருந்தது - முதலில் அவரை வணங்க வேண்டும் என்று தோன்றியது - ஒரு அனிச்சையாக எல்லாமே நடப்பது போல் இருந்தது - திடீரென்று " சிவனே ! எனக்கும் பீஷ்மர் போல இச்சா மரணம் வரம் வேண்டும் " "எனக்கு சமகம் மறந்துவிட்டது, நாளையும் உங்களை பார்க்கணும் " - கேட்டதும் கிடைத்தது போல் இருந்தது - சிவன் பேசவில்லை - ஆனாலும் வரம் கிடைத்தது போல் இருந்தது - மடத்தனமாகவும் இருந்தது - இப்பவே கேட்டு இருக்கலாமே

டெல்லி ஜாபாலி.

என்ன பாலா ரொம்ப நாளா பதியவே இல்ல என்று வந்த மின்மடல் உசுப்பியதால் இந்த பதிவு


மின்மடல் அனுப்பியவர் - டெல்லி ஜாபாலி. அவர் இயற்பெயர் மறக்கும் அளவுக்கு இந்த ஜாபாலி ஒட்டிகொண்டது - இந்திய செல்லில் இருந்து வட அமெரிக்காவிற்கும் missed கால் விடமுடியும் - அதுவும் மாலை பொழுதின் மயக்கத்தில் அவர்களிடம் திரும்ப பேசும் அளவு மணித்துளிகள் இருக்கும் - கார் ஓட்டி கொண்டு வரும்போது வேறு வேலை இருக்காது - செல்லில் பேசுவது தடை செய்ய படவில்லை போன்ற விஷயங்களை அலசி வைத்து இருப்பவர்


என்னை விட 10 வயது பெரியவர். விதண்டாவாதத்தில் கரை கண்டவர்.


அவரை நான் சந்தித்தது நான் டெல்லி சென்ற புதிதில் . RK Puram முருகன் கோயிலில் தன்னை மறந்து கீச்சு குரலில் பிள்ளையாரை திட்டி கொண்டு இருந்தார் - அருகில் அவர் மனைவியும் மக்களும் ஆமோதித்த வண்ணம் இருந்தனர் - அவர் குறை list கிட்டத்தட்ட அருகில் உள்ள அனைவரையும் இழுத்தது - அங்கு வந்துள்ள பலர் வந்த நோக்கமே டின்னருக்கு பிரசாதம் வாங்குவது என்பதால் ஒரு கூட்டம் கூடி விட்டது - நானும் அதில் கலந்தேன்


"ஏண்டாஅப்பா, இங்க பார், இவங்க எல்லாரும் பாக்கறாங்க, உனக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்ல? என் இப்பிடி பண்ற? நான் என்ன பெருசா கேட்டுப்பிட்டேன் - இன்னிக்கி குடும்பத்தோட வெளில சினிமா போனும் ஆபீஸ் வேலை அதிகம் வேக்காதேன்னுதானே சொன்னேன் - நீ என்ன பண்ணி வச்சு இருக்க - இன்னிக்கு கான்பெரென்ஸ் கால் - அதுவும் கிளைமாக்ஸ்ல - நிச்சயமா இந்த வேலை என்னால ஆகாது - என்னை பலி கிடா ஆக்கிட்ட ? எப்போ வருமோ தெரியாது - சரி அது போகட்டும் - போன வாரம் என்ன சொன்னேன் ? எங்க மாமா பையன் வந்து இருக்கான் - முதல் இன்டர்வியு - வேலை வாங்கி குடுக்கணுமா இல்லையா? நீ என்ன பண்றன்னே எனக்கு புரியல - இப்ப மாமா என்கிட்டே பேச மாட்டேனுட்டார் - நீயே போய் சமாதானம் பண்ணு - எனக்காக அவர் என்ன என்ன பண்ணி இருக்கார் தெரியுமா - in fact இந்த வேலையே அவர் போட்ட துதான் "


நான் படியேறி முருகனை பார்த்துவிட்டு கீழே இறங்கும் தருவாயில் அவர் இன்னும் நகரவில்லை - கும்பல் எல்லாம் பிரசாதம் வாங்க போய் விட்டது - அவர் கண்கள் கலங்கி இருந்தது - மொத்த குடும்பமும் விநாயகர் அகவல் சொல்லி கொண்டு இருந்தனர்


நான் அவரிடம் அருகில் சென்றேன் - "சார்" - திரும்பி பார்க்காமல் ஒரு தயிர் சாத டோக்கனை கொடுத்தார் - கண்மூடி இருந்தது -

"எனக்கு இது வேண்டாம் - நான் உங்கள்ட்ட பேசலாம்னு வந்தேன் - அங்க மண்டபத்தில் இருக்கேன் - நீங்க முடிச்சுட்டு வாங்க" என்றேன்

"ஒ அப்பிடியா - இதோ வர்றேன் - நம்ம கண்பத் எங்கியும் போக மாட்டன் - அப்பா வந்து முடிக்கறேன் - சாரோட பேசிட்டு வரேன் - என்ன சரியா"


நிஜமாகவே பிள்ளயார் தும்பிக்கை ஆடிய மாதிரி இருந்தது


"என்ன சார் ஊருக்கு புதுசா"


"ஆமாம்"


"அதான், தமிழ்ல பேசுன வுடனே வந்து விசாரிகிறீங்க - அவன் நல்லவந்தான் - என்ன இப்போ எங்கிட்ட எடக்கு பண்றான் - ஆனா எனக்கும் அவனை விட்டா யாரு இருக்கா "


அவன் பிள்ளையார் என்று கை சுட்டலில் இருந்து புரிந்தது


"என்னடா பித்து மாதிரி இருக்கேன்னு பாக்கறீங்களா - இங்க வீடு எல்லாம் வாங்கி இருக்கேன், குர்கான்ல இப்போ எங்க கம்பனி மாத்திட்டா - முன்ன மதுரா ரோட்ல இருந்தது"


"இவன ஒரு குழந்தயாயிருந்து பாக்கறேன் - அதான் பாசம் - இங்க பிரதிஷ்ட பண்ண எடுத்துண்டு வரப்போ சாயந்தரம், இவன என் கையில குடுத்து - இன்னிக்கி உன் கொழந்தையா நினைச்சு தாலாட்டு பாடுன்னு குடுத்தார் மகான் - எனக்கு கல்யாணம் ஆய் 2 வருஷம் இருக்கும் - என் பொண்ணு

பொறக்கல ... அன்னிலேந்து இவன்தான் எனக்கு புள்ள, அப்பா, சாமி எல்லாம் - நான் எப்பவும் இவன்கிட்ட சண்ட போட மாட்டேன் - இப்பதான் ரெண்டு மூணு வாரமா எல்லாம் எடக்கு மடக்க இருக்கு "


இன்னும் பேசியதில் அவர் நான் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறார் என்று தெரிந்தது - நிறைய விஷய ஞானம் இருந்தது - எனக்கும் தமிழ் பேச ஒரு நல்ல மனுஷர் - அடுத்த நாளே என் வீட்டுக்கு வந்தார் - அந்த ஞாயிறு அவர் குடும்பத்துடன் வந்தார், அவரை அண்ணா என்று கூப்பிட வில்லை - ஆனால் மன்னி என்று முதல் பேச்சு ஆரம்பித்தவுடன் கூப்பிட்டேன் - மிக ஒடிசலான தேகம், பார்வையில் ஓர் கனிவு, எப்போதும் சிரித்த முகம் - என் மன்னி ஞாபகம் வந்தது - "குட்டி பொண்ணு" அவர்கள் ஒரே மகள் - துரு துரு .


அவரும் என் ஜாதி - அதாவது சாப்ட்வர் அஞ்சிநேயர் - எனக்கு தெரிந்த அனைத்து கணினி மொழிகளிலும் வேலை பார்த்து இருந்தார் - மிக பழைய பன்ச் கார்டெல்லாம் காண்பித்தார்


அவர் வேளையில் ஒரு சின்ன சிக்கல் - எல்லோருக்கும் கடவுச்சொல் வழங்க வேண்டும் - ஆனால் கொடுத்த ஆளை தவிர அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது - யாராலும் மாற்ற கூடாது -இதுதான் சாரம் - எனக்கு தெரியாத , புரியாத வார்த்தை எல்லாம் சரளமாக சொன்னார் - எதோ நான் அவருக்கு உதவுவேன் என்று

நானும் என்னால் முடிந்தவரை - தெரிந்த அனைவரிடம் இதை பற்றி பேசினேன் - யாரும் இதை சீர் தூக்க முடியல


மேலும் தொடரும் ...

Wednesday, March 3, 2010

மண் தோன்றா காலத்து மனிதர்கள்

நான் - மிக பழைய தமிழக வாலிபன் - எனது கதையை கேளுங்கள்
"தோன்றிற் புகழோடு" ஒப்ப என் தோன்றலும் புகழ் சேர்த்த ஒன்று.
எனது கை விரல்களின் ஜாலம் என் பெற்றோர்களுக்கு வியப்பு அளிக்கவில்லை , ( ஏனெனில் என் தந்தை இதில் தேர்ந்தவர்) ஆனால் மகிழ்ச்சி அளித்தது உண்மை

நீரை நிலை நிறுத்தும் வீரன் என்று பெயர் பெற்றேன்

ஐந்து வயதில் ஆற்று போக்கை ஆறு போல் சுழித்தேன் - என் போறாத நேரம் - அந்த சுழியின் உள்ளே முனிவர் குடில் இருந்தது தெரியாமல் போனது - வெள்ளம் புகுந்ததும் வெளியேறிய அவர் - "நீ வந்த காரியம் இறை ஆதலால் அதை தடுக்க விரும்பவில்லை - ஆனால் உன் பெயர் சொல்லும் அளவுக்கு உன்னை வருங்காலம் நினைத்து பார்க்காது; உன் சுற்றமே உன்னை தூற்றும்; உன் குல பெயர் அவ பெயராக மாறும் "

நான் சிறுவன் என்று என் தந்தை சொன்னதும் , முனிவர் மனமிரங்கி - " சரி, பல்லாண்டு காலம் மக்கள் உன்னை மறந்தாலும், மீண்டும் உன் நினைவு அவர்களுக்கு வரும் - அதற்க்கு உன் செயலே காரணமாக அமையும் " என்று சொல்லி மறைந்து போனார்

என் தந்தை என்னை தென் கோடி அனுப்பினார் - படித்தேன், வளர்ந்தேன் ; வாட்ட சாட்டமான என் உரு நாடு பூராவும் தெரிந்த ஒன்று - தென்னாட்டில் உள்ள பல நீர் நிலைகள் என் கை பட்டே வளர்ந்தது - பசுமை என்னை பின் தொடர்ந்தது - என் கை படிந்த இடமெல்லாம் தோட்டம், மாடம் , மாளிகை - முச்சந்தி, நாற்ச்சந்தி, வளைவுகள் என்று கட்டட கலையில் வித்தகனாக்கியது - அரசனுக்கு அருகாமையில் அமர்த்தியது - அடுத்த நாட்டு அரசர்களெல்லாம் வந்து தலை வணங்கி எங்களிடம் இருந்து வித்தை கற்று அல்லது வித்தகர்களை அழைத்து சென்று அவர் நாட்டிற்கு நீர்வளம் நிலவளம் பெருக்கினர்.

என் தமயனை இங்கே சொல்லியே ஆக வேண்டும் - என்னை போல இடக்கு இல்லாமல் - தந்தை சொல் அப்படியே கேட்பவன் - அப்பாவும் அவனுக்கு ரகசியங்களும் விசித்திரங்களும் நிறைய சொல்லி கொடுத்தார் - அவர் பாத்திரம் அறிந்து இடுவதில் வல்லவர்

தமையன் தருக்கின்றி தளம் அமைப்பதில் வல்லவன்.
எங்கள் புகழால் எங்கள் குலத்துக்கே புது பெயர் கிடைத்தது - அதன் பொருள்கள் - நீர் குடிப்பவர் ; சூரியன் ;
"that which saves one from drowning "

ஒரு சமயம், உலகின் மிக சினந்த முனி எங்களிடம் வந்து கடலை பின்னிழுத்து நிலம் - அளம் அமைக்க சொன்னதும் செய்தோம்

ஆம் - நான்தான் நீளன்; என் தமையன் நளன் - எங்கள் குளம் கபி - மூத்த குடி மக்கள் நாங்கள் - திரை விடர்கள் - அதாவது கடல் கணவர்கள் அல்லது மூப்பின்றி இருப்பவர்கள்

எங்கள் விஞ்ஞானம் / அறிவியல் வாழ்வு - அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும், நாங்கள் கடலிலே கல்லை கொண்டு பாலம் அமைத்தாலும், உலகம் உண்டி தேடுமுன் நாங்கள் உயிர்வியல் உயரத்தில் இருந்தாலும் அந்த முனிகுமார சாபம் இன்னும் தீரவில்லை - எங்களவரே இன்னும் எங்களை புரிந்துகொள்ள வில்லை - புகழ வேண்டாம் please இகழாமல் இருங்களேன் !...

ச்ச ரொம்ப வயசாயிடுச்சே

அட எனக்கும் அது நடந்து இருவத்தி அஞ்சு வருஷம் ஆயிடிச்சு
அதுதான் முதல் முறை - ஒரே முறை
சரியா சொல்லனும்னா எனக்கு இது நடக்கும்னு முடிவே பண்ணலே

அந்த வருஷம் மழை சுத்தமா பெய்யல

மார்ச் மூணாம் தேதி

விடியலா இல்ல பாதி ராத்திரியான்னே தெரியல - வந்து எழுப்பினாங்க - ஒரே லைட் வெளிச்சம்

பார்பர் வந்து சிரித்தான்
கல்யாண முடி எடுக்கணும் அப்பிடின்னான்
சரின்னேன் - என்ன பண்ணுவான்னு தெரியல

சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் எல்லாரும் வந்து வேடிக்கை பாத்தாங்க

இடம் பெரம்பலூர் பாட்டி வீடு -
கிணத்தடி கல்லில் உக்கார வைத்து ரெண்டு இழுப்பு - போய் குளிங்கன்னு சொல்லிட்டான் - கண்ணாடி காமிப்பான்னு நெனைச்சேன் - காமிக்கல

குளிச்சுட்டு வந்தா வேஷ்டி குடுத்தாங்க சுத்திகிட்டு வந்து உக்காந்தேன் - பட்டு போல - வழ வழ ன்னு இருந்துச்சு

எதிர்ல காந்தம் வீட்டுக்கு வர சொன்னார் அப்பா
குண்டு மாமா வந்து சொன்னார் - ஒரே புகை - தூக்கம் - ஒன்னும் புரியல
திடீர்னு வேஷ்டி போட்டு மூடினாங்க - தாத்தா வந்து காதிலே சொன்னார்
திருப்பி சொல்ல சொன்னார் - ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தான் - சத்தமா சொன்னேன் - படு சுட்டி பலே !.. அப்பிடின்னு குண்டு சொன்னார்

எலை போட்டு பொங்கல் இட்லி எல்லாம் போட்டு எச்ச பண்ணாம சாப்பிட சொன்னங்க

பாத்திரத்துல இருந்த தண்ணிய எடுத்து சுத்த - நானும் சுத்தினேன்

மத்யானம் கல்யாண சாப்பாடு - சாப்பிடவுடன் தாம்பூல தட்டு அருகில் சென்று வெற்றிலை காம்பு சுண்ணாம்பு ரோஜா பாக்கு எல்லாம் எடுத்து மெல்ல ஆரம்பித்தது தான் தெரியும் - தூக்கம் கண்ணை சொருக வழிநடை திண்ணையில் தலைக்கு கை வைத்து படுத்துவிட்டேன் - சாயங்காலம் சித்தி வந்து எழுப்பி NTC கூட்டினுண்டு போனா - ரிஷப்ஷன் ஸ்வீட் காரம் ; சாப்பிட்டேன் - என்னடா முத நாளே டொக்கா? என்று சில பெருசுகள் கேட்டது - எது என்று தெரியாமலே - "நாளை முதல் நன்று" அப்பிடின்னு சொன்னேன் - என் தமிழ் வாத்தியார் சொன்னது

அவ்ளோதான் - என் பூணல் கல்யாணம் முடிஞ்சுடுச்சு

அக்கா கல்யாணம்தான் அன்னிக்கின்னு முடிவு - திடீர்னு அப்பாதான் ஏற்பாடு பண்ணினார்
ஒரே சமயத்தில ரெண்டு பேர்க்கும் எப்பிடின்னு யோசனையெல்லாம் பண்ணி பாத்து கடசில சரி இருந்துட்டு போகட்டும்னு சொல்லிட்டாங்க

அப்பா NLN உக்கும் ; எனக்கு தாத்தாவும் பூணல் போடுவார் என முடிவு செய்தனர்
கோத்ர விஷயங்களுக்கு ஸ்வாமிகள் முற்று புள்ளி வைத்தார்
"சங்கரனுக்கு இது நல்லதுதான் , பின்னால உதவும்"
நிஜம்மாவே பின் நாளில் பின்னால உதவியது தனி கதை

நினைச்சு பாக்கும்போது - ச்ச ரொம்ப வயசாயிடுச்சே